
ஷில்லாங்கில் வசித்து வரும் ரஷ்ய பெண் மரினா கார்பானி, இந்தியாவில் திருமணமாகி வாழ்ந்துவரும் நிலையில், தற்போது ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா (OCI) கார்டைப் பெற்றதை உற்சாகத்துடன் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மரினா, தன் குழந்தையை ஒரு கைப் பக்கம் தூக்கியபடி, மற்றொரு கையில் OCI கார்டுடன் நிமிர்ந்த நெஞ்சோடு, “நான் இதைப் பெற்றுவிட்டேன்! இப்போது நான் இந்தியர்… கிட்டத்தட்ட!” எனக் கூறும் அந்தக் கணங்கள் நெஞ்சை உலுக்கும் வகையில் இருந்தன.
“மூன்றரை ஆண்டுகள் நான் காத்திருந்தேன். கடைசியாக இதை பெற்றுவிட்டேன்!” என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். வீடியோவின் கடைசி பகுதியில், “இப்போது என் அடுத்த இலக்கு – என் குழந்தைக்கு இதைப் பெற வேண்டும்” என்றார்.
View this post on Instagram
“Finally I am Indian” என்கிற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ தற்போது 20 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் மனமுவந்த வாழ்த்துக்களை வழங்கி வருகின்றனர். “ஒரு இந்திய அடையாளத்தைக் காட்டி இவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பதை இதுவரை பார்த்ததில்லை” என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், “நீங்கள் எப்போதும் எங்களுக்குள் இந்தியர்தான்; இப்போது ஆவணங்களும் அதை ஒப்புக்கொள்கின்றன” எனக் கூறியுள்ளார். OCI என்பது முழுமையான இந்திய குடியுரிமை அல்ல. ஆனால் இது இந்திய தாயகம் கொண்ட வெளிநாட்டு நபர்களுக்கு விசா தேவையின்றி நாட்டில் வசிக்க, வேலை செய்ய, சுதந்திரமாக பயணிக்க உரிமையளிக்கிறது.
மரினா கார்பானியின் பயணம், அவரை தொடர்ந்து பார்த்து வந்த இணையவாசிகள் மனங்களில் உருக்கம் ஏற்படுத்தியுள்ளது. அவரது இன்ஸ்டாகிராம் பையோவில், “என் காதலனாகிய கணவரை திருமணம் செய்து, அவரது நாட்டில் வாழ்ந்துவருகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், தாயாக வாழும் அனுபவங்கள், இந்திய கலாச்சாரத்தில் இணைந்திருக்கும் அவரது வாழ்க்கை பற்றியும் அடிக்கடி பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது.