
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி, அக்கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அக்கட்சி விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றது. அதோடு தமிழகம் முழுவதும் கட்சிக்கு மாவட்டச் செயலாளர்கள், புதிய நிர்வாகிகளை விஜய் நியமித்து வருகிறார். இந்நிலையில் கோவையில் இந்த மாதம் இறுதியில் தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சென்னை, விழுப்புரம் தொடர்ந்து கோவையிலும் பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்த தவெகவினர் திட்டமிட்டு உள்ளனர். கோவையில் கடந்த சனிக்கிழமை அன்று தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.