
சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கால்வாய் சாலை முதல் சந்தில் சொந்த வீட்டில் வசித்து வருபவர் வினோத் (44). இவர் தனது வீட்டின் முதல் தளத்தை குத்தகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் நடராஜ் (65) என்பவர் கடந்த மூன்று வருடங்களாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நடராஜ், மனைவி கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் நடராஜ் தொடர்ந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதும், அக்கம் பக்கத்தினரிடம் தகராறில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர் வினோத் வீட்டை காலி செய்யுமாறு நடராஜிடம் கூறியுள்ளார்.
இதனால் நடராஜ் அட்வான்ஸ் உடனே திருப்பித் தருமாறு கேட்டுள்ளதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இரவு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் தீப்பிடித்து எரிவதாக அக்கம் பக்கத்தினர் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து தீயணைப்பு துறையின் உதவியால் தீயை அணைக்க முயற்சித்தனர். இந்த விபத்தில் வீட்டின் முன் இருந்த 5 பைக்குகளும் எரிந்து சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அந்த காட்சியில் நடராஜ் 5 பைக்குகளின் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நடராஜை தேடிவந்த நிலையில் காவல்துறையினர் இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டு உரிமையாளரின் பைக்குகளை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.