
சேலம் குகை பகுதியில் ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினருக்காக மாத்திரை வாங்க மருந்துகத்திற்கு சென்றிருந்தார். இந்த மருந்தகம் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மருந்தகத்திற்கு சென்ற ஹரி மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரை விவரத்தை அங்கிருந்த மாதேஷ் என்பவரிடம் கொடுத்தார். அதனை வாங்கிய மாதேஷ் திடீரென மருந்து சீட்டை கீழே போட்டுவிட்டு வேறொரு சீட்டைப் பார்த்து மாத்திரை கொடுத்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஹரி அவரிடம் வாக்குவாதம் நடத்தினார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மருந்தகத்தின் முன்பு கூடிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாதேஷ் குடிபோதையில் இருக்கிறாரா? என்பதை ஆய்வு செய்வதற்காக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனையில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் கூறியதாவது, மாதேசுக்கு வேறு எதுவும் பிரச்சனை இருக்கிறதா என்பதை கண்டறிய மருத்துவர்கள் அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்ய கூறி இருக்கிறார்கள். அதன் மூலம் வெளிவரும் முடிவில் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.