
உத்திரபிரதேசத்தில் 50 வயதான நபர் ஒருவரின் வாழ்வில் நடந்த நெகிழ்ச்சி கதை தற்போது வைரலாகி வருகின்றது. இதில் வெல்டர் தொழிலாளியான ராகேஷ் குமார் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இருந்து மாயமான தனது மனைவி சாந்தி தேவியை தொடர்ந்து தேடி வந்துள்ளார். மேலும் தனது மனைவியை பல்வேறு நகரங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த ராகேஷ் குமார் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் மனைவி காணாமல் போனதால் சோகமடைந்த இவர் தனது நண்பர்களுடன் தங்க முடிவு செய்துள்ளார். இதில் ராகேஷின் நண்பர் ஒருவர் ராகேஷின் உடல்நிலை மோசமடைவதை கவனித்தும், அவருக்கு இருக்கும் கண் பிரச்சனைக்கும் மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தி உள்ளார். அதன் பிறகு உன்னா மாவட்ட மருத்துவமனையில் செய்த பரிசோதனையில் ராகேஷிற்கு கண் புரை இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதனையடுத்து அறுவை சிகிச்சை முடிந்த பின் ராகேஷ் குமார் படுக்கையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது தனது படுக்கைக்கு அருகில் அனுமதிக்க பட்டிருந்த பெண்ணின் குரலை கேட்டு ஒரு கணம் அதிர்ச்சி அடைந்ததோடு இது தனக்கு நன்கு அறிந்த குரல் என்பதும் தெரிய வந்தது. அதன் பிறகு பக்கத்து படுக்கையில் தனது மனைவிதான் இருக்கிறார் என்பது தெரிந்ததும் ராகேஷ் உணர்ச்சி வசப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டுள்ள சாந்திக்கு தன்னை அடையாளம் காண முடியவில்லை என்பதை அறிந்து ராகேஷ் குமார், அதிர்ச்சி அடைந்தார்.
எனினும் தனது மனைவியை ராகேஷ் அர்ப்பணிப்புடன் கவனித்துக் கொண்ட விதம் படிப்படியாக அவரது நினைவாற்றலை மீட்டெடுக்க உதவியது. இது குறித்து மருத்துவர் பேசியதாவது, சாந்தி இங்கு வந்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இருந்ததாகவும், அவரால் எதையும் சொல்லவோ புரிந்து கொள்ளவோ முடியவில்லை என்றும் கூறினார். அதோடு சிகிச்சை மற்றும் கணவரின் ஆதரவுடன் தற்போது சாந்தியின் உடல்நிலை மேம்பட்டுள்ளது எனவும், தன்னைத்தானே சாந்தி அடையாளம் காண தொடங்கியுள்ளார் எனவும் கூறினார்.