உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில், ஒரு பெண் பியூட்டி பார்லரில் உட்கார்ந்திருந்தபோது, அவரது கணவர் தலைமுடியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 20ஆம் தேதி நடந்ததுடன், சம்பந்தப்பட்ட கணவர் ராம்பிரதாப் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டின்படி, அவரின் மனைவி, கண்களை அழகுபடுத்தும் சிகிச்சைக்கு பார்லர் சென்றிருந்த போது, ராம்பிரதாப் மூன்று நண்பர்களுடன் அங்கு வந்து, அவரது கூந்தலை வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்ணின் தந்தையான ராதாகிருஷ்ணா, தனது மருமகன் ராம்பிரதாப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

புகாரில், தனது மகள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் ராம்பிரதாப் என்பவரை திருமணம் செய்திருந்ததாகவும், அதன் பின்னர் அவர்கள் வரதட்சணை கேட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளை, சில உள்ளூர் மக்கள், இந்த சம்பவம் வரதட்சணைக்கு முற்றிலும் தொடர்பற்றது எனவும், பார்லருக்கு சென்ற மனைவியின் செயல்பாடு மீது கோபமடைந்த ராம்பிரதாப் தான் இந்த செயலை நடத்தியதாகவும் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது என வட்ட அதிகாரி ரவிபிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்தச் செயல் சமூகத்தில் பெண்களின் தனிப்பட்ட உரிமைகளும் பாதுகாப்பும் மீதான கேள்விகளை எழுப்பும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.