ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அட்டகாசம் செய்த காட்டு யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு விவசாயிகளை மிதித்து கொன்றது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கருப்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் சிரமப்பட்டனர். கும்கி யானைகள் உதவியுடன் கருப்பன் யானைக்கு ஆறுமுறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 17-ஆம் தேதி ஏழாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி கருப்பன் யானையை வனத்துறையினர் பிடித்து பர்கூர் வனப்பகுதியில் தமிழக- கர்நாடக எல்லையில் இருக்கும் பாலாற்று பகுதியில் விட்டனர். இதனையாடுத்து யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் மற்ற யானைகளுடன் சேராமல் தனியாகவே வனப்பகுதியில் சுற்றித்திரிந்த கருப்பன் யானை சுமார் 150 கிலோமீட்டர் தூரம் நடந்து தற்போது தாளவாடி பகுதியை நெருங்கியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் கருப்பன் யானை ஆசனூர் வழியாக தாளவாடி வனப்பகுதியை வந்தடையும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மலைவாழ் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் வனத்துறையினர் கருப்பன் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.