அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளிக்கு வெளியே, 17 வயது சிறுமியை அவரது தந்தை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 18ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், சிறுமி ஒரு வயது முதிர்ந்த ஆணுடன் திருமணம் செய்ய மறுத்ததால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் குற்றவாளிகளாக சிறுமியின் தந்தை இக்சான் அலி (44) மற்றும் தாய் ஜஹ்ரா அலி (40) மீது கொலை முயற்சி, கடத்தல் முயற்சி, மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், திருமணத்திற்கான அழுத்தங்களை நிராகரித்ததற்காக தனது தந்தை தன்னை கொலை செய்ய மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 18ஆம் தேதி, சிறுமி வீட்டைவிட்டு தப்பித்து பள்ளி நிர்வாகத்திடம் உதவி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து, மாணவி மற்றும் அவரது காதலனை தாக்கியுள்ளனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளில், இக்சான் அலி தனது மகளை கழுத்து நெறித்தபடி கதி இழந்து விழுந்து போகும் அளவுக்கு தாக்கியிருப்பது பதிவாகியுள்ளது. மாணவியின் காதலன் மற்றும் மற்ற மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். சிறுமி தப்பித்து பள்ளியின் முதன்மை அலுவலகத்திற்குள் ஓடி, “என் அப்பா என்னை கொல்ல முயன்றார்!” என அலறினார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெற்றோர்கள் பள்ளிக்குள் நுழையமுடியாதவாறு தடையிட்டது.

இக்சான் அலி கைது செய்யப்பட்டபோது, தனது மகளின் நிலையை விட, காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தனது காரைப் பற்றியே அதிகமாக கவலைப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் அவரை கைதுசெய்து காவல்துறை வாகனத்திற்குள் அழைத்துச் செல்லும் போது, அவர் தனது மனைவியிடம் “காரை எடுத்துக்கொள், அவர்கள் அதை திருடிவிடுவார்கள்!” என ஆவேசமாகக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிறுமியின் காதலனின் குடும்பத்தினர், அலி குடும்பத்திடம் இருந்து முன்னதாக மிரட்டல்கள் மற்றும் தொந்தரவுகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது, சிறுமி பாதுகாப்பாக  இருக்கிறார். மேலும் அவரது பெற்றோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.