
ஒவ்வொரு வருடமும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட நான்கு வகையான டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றது. இதில் மிக உயர்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கப்பட்டு 16ஆம் தேதி வரை லண்டனில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான பரிசுத்தொகை 464 கோடி ரூபாய் எனவும் இது போன வருடத்தை விட 11.2% அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பரிசுத் தொகை ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா 241/2 கோடியும் இரண்டாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு 12 1/4 கோடியுமாக பிரித்துக் கொடுக்கப்படும். அதேபோன்று இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் ஜோடிக்கு 6 1/4 கோடி பரிசுத்தொகை என்று கூறப்பட்டுள்ளது. இத்தொடரில் பங்கேற்க இருக்கும் முன்னணி வீரர்கள் வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடரில் இறுதிச்சுற்று வரை விளையாடி இரண்டாம் இடத்தைப் பிடித்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிக் கிரிகியோஸ் இந்த ஆண்டு விளையாடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில் “விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் விளையாட வேண்டும் என்ற காரணத்திற்காக முட்டிக்காலில் அடிபட்டு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு கடுமையாக முயற்சி செய்து மீண்டு வந்தேன்.
ஆனால் மயோர்க்காவில் கடந்த வாரம் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் விளையாடிய போது கை மணிக்கட்டில் வலி ஏற்படவே ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது தசையில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் விளையாட முடியாதது எனக்கு ஏமாற்றம் தான் ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன்” இவ்வாறு கிரிகியோஸ் கூறினார்.