
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சக்தி நகரில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் பாப்பாத்தி தனது மகன் ராஜபாண்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ராஜபாண்டி தனது தாயை காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது சக்தி நகரில் சென்றபோது முன்னால் ஒரு சரக்கு வேன் குண்டும், குழியுமான பள்ளத்தில் சிக்கியது.
மேலும் சாலை குறுகலாக இருந்ததால் ராஜபாண்டியால் காரை முன்னோக்கி நகர்த்த இயலவில்லை. வாகனங்கள் நின்றதால் பின்னோக்கியும் வர முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி பொக்லைன் எந்திரம் உதவியுடன் வேன் மீட்கப்பட்டது. இதனையடுத்து வேகமாக ராஜபாண்டி தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாப்பாத்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசமான சாலையால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.