திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோபால்பட்டியில் இருக்கும் ஒரு வீட்டில் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. அங்கு ஒரு பெண் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட மருத்துவர் நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் அந்த வீட்டிற்கு சென்று திடீர் சோதனையிள் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர் கேரளாவை பூர்வீகமாக கொண்ட கலாவதி(47) என்பதும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அங்கு குடியேறியதும் தெரியவந்தது. தனது வீட்டின் கீழ் தளத்தில் கலாவதி மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். அவர் பள்ளி படிப்பை படித்துவிட்டு மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ் எதுவும் இல்லாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கலாவதியை கைது செய்தனர். மேலும் வேம்பார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ் மருத்துவமனையாக செயல்பட்ட அறையை பூட்டி சீல் வைத்துள்ளார்.