டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்கள் சிலர் பஜனை பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மெட்ரோ ரயிலில் கூட்டம் நிறைந்த இடத்தில் பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து வந்த சில பெண்கள் டோலக், கர்த்தாள்  போன்ற இசைக்கருவிகளை இசைத்து சத்தமாக பஜனை பாடினர்.

இதனை ரயிலில் பயணிக்கும் பொதுமக்கள் கண்டுகொள்ளாதது போல் இருந்தனர். பெரும்பாலான பயணிகள் தங்களது கைபேசியை பார்த்துக்கொண்டே வந்தனர். அச்சமயத்தில் அப்பெட்டிக்குள் நுழைந்த CISF பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்தப் பெண்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொள்ளக் கூடாது என எச்சரித்தார்.

அதன் பின் பெண்கள் பஜனை பாடுவதை நிறுத்திவிட்டு அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இச்சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவிற்கு பயனர்கள் பலரும் இது போன்ற பொது இடங்களில் ஆன்மீக நிகழ்வுகளை நடத்தக்கூடாது எனவும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். சிலர் அவர்கள் பொது இடங்களில் தகாத முறையில் நடந்து கொள்ளாமல் வெறும் பஜனை பாட்டு தான் பாடியுள்ளார்கள் என ஆதரவும் தெரிவித்துள்ளனர்.