மகாராஷ்டிராவில் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூடநம்பிக்கையான  பல சடங்கு முறைகளை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் குழந்தைகளின் வயிற்றில் சூடான இரும்பு கம்பியை வைத்தால் நோய் தீரும் என நம்பிய அவர்கள் இன்னும் அதனை செயல்படுத்தி வருகின்றனர். இது போன்ற மூடநம்பிக்கைகளை அழிப்பதற்காக 2013 ஆம் ஆண்டு மனித பலி மற்றும் பிசாசு வழிபாடுகள் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

ஆனாலும் இங்குள்ள மக்கள் தங்களுடைய பழக்க வழக்கத்தில் இருந்து மாறாத நிலையில் அவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வருவதற்காக மகாராஷ்டிரா அந்தஸ்ரத்த நிர்மூலன சமிதி(MANS) கிராமப்புறங்களுக்கு சென்று விழிப்புணர்வு முகாம் நடத்தியது. இந்த முகாம் மார்ச் 15 முதல் ஏப்ரல் 7 வரை நடைபெற்ற நிலையில் 140-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

குழந்தையின் வயிற்றில் இரும்பு கம்பி வைப்பது மற்றும் மழை வருவதற்காக விழாக்கள் நடத்தப்படுவது போன்ற மூடநம்பிக்கைகளிலிருந்து மக்கள் வெளிவர வேண்டும் என்பதற்காக அறிவியல் விளக்கங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அதில் குறிப்பாக ஜடா எனப்படும் முரட்டு தலை முடியை கொண்ட பெண்களிடம் சுத்தம் மற்றும் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அதன் மூலம் 327 பெண்கள் தங்கள் முடியை வெட்டிக்கொண்டு மூடநம்பிக்கையிலிருந்து வெளிவந்தனர். மேலும் அறிவியல் சிந்தனையை கிராமப்புற மக்கள் வளர்த்துக் கொண்டாலே ஆபத்தான நம்பிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று MANS உறுப்பினர் நந்தினி ஜாதவ் தெரிவித்துள்ளார்.