
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில் கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆட்சியின் தவறுகளை வெளிப்படையாக கூறியுள்ளார். அதன்படி , டிரம்ப் ஆட்சி காலத்தில் சீனா அமெரிக்கா வர்த்தகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகளை பைடன் 4 ஆண்டுகளில் சரிசெய்து விட்டதாகவும் , சீனாவுக்கு அமெரிக்காவை விற்கும் நிலைக்கு டிரம்ப் சென்றுவிட்டதாகவும், அவரின் வர்த்தக போர் அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சியை உருவாக்கியது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், டிரம்ப் தனது ஆட்சியில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரிச்சலுகைகளை வழங்கினார், மற்றவர்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றும், இதனால், சாதாரண மக்கள், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு எந்தவிதமான நிவாரணங்களும் கிடைக்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். டிரம்பின் நடவடிக்கைகள் பணக்காரர்கள் மத்தியில் மட்டுமே ஆதரவான நிலையை ஏற்படுத்தியதாகவும், மற்றவர்களைத் தவிர்த்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், சட்டவிரோத குடியேற்றம் என்ற ஒரே தலைப்பை மட்டும் விவாதிக்கின்ற டிரம்ப், அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லாதவர் என்று அவருடன் பணியாற்றியவரே சாட்சியமாக கூறியதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.