பெங்களூர் ஒயிட்பீல்டு அருகே 25 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இளம் பெண்ணின் வாட்ஸ்அப்புக்கு ரிசர்வ் வாங்கிய அதிகாரி என்று கூறி ஒருவர் பேசியுள்ளார். அப்போது உங்கள் வங்கி கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடத்தப்பட்டுள்ளது. அது குறித்து மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்று அந்த இளம் பெண்ணிடம் கூறியுள்ளார்.

அதன்படி காவல் துறை என்று கூறி மற்றொரு நபர், அந்த இளம் பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நீங்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதால் உங்களை கைது செய்வோம் என்று மிரட்டி உள்ளனர். இதில் உங்களை கைது செய்யாமல் இருக்க நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும்படி மர்ம நபர் ஒருவர், இளம் பெண்ணை மிரட்டி உள்ளார்.

இதனால் மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ. 84.5 லட்சத்தை இளம்பெண் அனுப்பியுள்ளார். இதையடுத்து தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் மர்ம நபர்கள் ரிசர்வ் வங்கி அதிகாரி, மும்பை போலீசார் பெயரில் மிரட்டி பணம் பரித்ததையும் இளம்பெண் உணர்ந்தார். இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.