திண்டுக்கல் அருகே நத்தம் வாடிப்பட்டி என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்கு நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை காண நடிகர் சியான் விக்ரம் மற்றும் நடிகை துஷாரா விஜயன் வருகை புரிந்திருந்தனர். மேடையின் உயர் பகுதியில் நின்று கொண்டிருந்த அவர்கள் காளையை அவிழ்த்து விட்டதும் வீரர்கள் அதனை அடக்குவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அதோடு பார்வையாளர்களோடு அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்த அவர்கள் வீரர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

இது தொடர்பாக நடிகர் விக்ரம் பேசும்போது, “ஜல்லிக்கட்டு காண்பது இதுவே எனக்கு முதல் தருணம்” என்றும், படத்தில் காண்பது போல் நான் ஒன்றும் வீர தீரன் சூரன் அல்ல, துணிச்சலோடும், தைரியத்தோடும் காளையை அடக்கும் இந்த வீரர்கள் தான் உண்மையான வீர தீர சூரர்கள் என்று அவர் கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய நடிகை துஷாரா விஜயன் “இது நம்ம ஊர் திருவிழா , அதனைப் பார்க்க நேரில் வந்துள்ளேன்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். மேலும் நடிகர் விக்ரம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.