
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் மேற்கு பயோனீர் காலனியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1983-ஆம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் திருநின்றவூர் லட்சுமி பிரகாஷ் நகரில் 2,400 சதுர அடி உடைய இரண்டு இடத்தை சிவப்பிரகாசம் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார்.
பின்னர் பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வில்லங்க சான்றிதழ் போட்டு வந்துள்ளார். கடந்த 2021- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வில்லங்க சான்றிதழ் எடுத்து பார்த்த போது அந்த நிலம் சரத்பாபு, மோகன் ஆகியோரது பெயர்களில் பத்திரப்பதிவாகி இருப்பது தெரியவந்தது.
அதில் சரத்பாபு பெயரில் இருந்த இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் துக்சந்த் பாகுமார் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டு நில மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாலகிருஷ்ணன் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் மத்திய குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், மோகனும், சரத்பாபுவும் போலியான ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று மாலை சரத்பாபுவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் மோகனை தேடி வருகின்றனர்.