சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் கார்த்திக் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கார்த்திக் ராகவன் எனது உறவினர் ஆவார். அவரை நம்பி 10- ஆம் வகுப்பு படிக்கும் எனது மகளை ஆன்லைன் விளையாட்டு கற்பதற்காக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்த போது அவர் எனது மகளிடம் தவறாக பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் அதனை செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் புகார் மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அப்போது உரிய விசாரணை நடத்திய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக் ராகவனை கைது செய்தனர்.