
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் பத்லாப்பூர் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 3 மற்றும் 4 வயது சிறுமிகளிடம் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்த அக்ஷய் ஷிண்டே(23) பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 17ஆம் தேதி குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மும்பை முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. இந்த விவகாரத்தில் அக்ஷய் ஷிண்டே (23) கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய இரண்டாவது மனைவியும் பாலியல் புகார் கொடுத்தார். இந்த இரு புகார்களின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நேற்று முன்தினம் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
மும்பை நெடுஞ்சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது திடீரென அக்ஷய் காவலர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்கி சுட ஆரம்பித்தார். இதனால் தற்காப்புக்காக காவலர்கள் அவரை என்கவுண்டர் செய்தனர். இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார். இந்த சம்பவத்திற்கு மகாராஷ்டிரா முதல்வர் விளக்கம் கொடுத்திருந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினரான ராஜு பாட்டில் என்பவர் என்கவுண்டருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அக்ஷய் ஷிண்டே துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதற்கு பத்லாப்பூர் மக்கள் இனிப்புகள் வழங்கி அதனை கொண்டாடியுள்ளனர். இந்த விவகாரம் பேசும் பொருளாக மாறி உள்ளது.